தேடிவந்த பெருஞ்செல்வம் தீப்பட்ட துண்டோ?
செந்தமிழ்க்கோ இந்நிலைமை செவிப்பட்ட துண்டோ?
ஓடிவந்த கால்களையே ஒருவாளால் வெட்டி
உடல்துடிக்கப் போட்டதுபோல் உளந்துடித்துப் போனேன்!
‘மூடிவைத்துக் காத்திருந்த அமுதத்தை அந்தோ!
மூடர்கள் கவிழ்த்தனரோ முதியவரே!’ என்றேன்’
‘கோடிவந்தாற் கொடுக்கலாம் என்றிருந்தேன், இன்று
கொடுக்கின்றேன் நெருப்பிற்குத் கொள்ளை!’ என்று வீழ்ந்தார்!
‘பூட்டனார் ஒருவர்பெயர் பூங்குன்ற வாணர்!
தீட்டினார் இலக்கியத்தைத் திசைக்கொழுந்தை! அதனைப்
பாட்டனார் காத்தெனக்குப் பரிசளித்தார் ஐயா!
பாவம், என் பெண்ணுக்கு வைத்திருந்தேன் மெய்யாய்!
மூட்டினான் நெருப்பொருவன் முன்னோர்கள் சொத்தில்!
மூலத்தில்! முதற்பொருளில்! முத்தமிழில்!’ என்று
கோட்டினார் கண்ணீரைக் குழந்தையென அழுது!
‘குலக்கொடிபோய்ப் படர்கொம்பிற் கொடு நெருப்போ?’ என்றார்!
‘வேறொன்றும் சொத்தில்லை!’ வெண்டமிழைக் காத்தேன்!
விரும்பிவந்தார் அநேகர்க்கு வித்தாரம் கூறிக்
கூறுபொருள் ஈவதெனிற் கொடுத்திடுவேன் என்றேன்!
குறித்தசொற் கேட்டிருந்தான் கூற்றென்ற ஒருவன்!
நூறுபொருள் இவன்பெறவோ நொய்யோலைக்கென்று
நூறினான் செந்தழலாற் சீறினான்!’ என்றார்!
மாறொன்று முரைத்தற்கு வரவில்லை! வெந்து
மாய்கின்ற சிறுகுடிலில் மடிகின்ற துள்ளம்!
|