பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 76

பொறாமையால் தமிழுக்குப் புகைவந்து சேரும்!
        புன்மையால் ஐயகோ! பகைவந்து சேரும்!
உறாமையால் நல்லெண்ணம் ஊறுவரும் ஐயா!
        உண்மையில் உண்மையில் உள்ளத்தில் ஞானம்
பெறாமையால் என்றைக்கும் பிழைவந்து சேரும்!
        பிணிவரும்! அப்புறம் பேய்வந்தால் ஆவி
இறாமையால் இருக்கின்றேன் இருக்கின்றேன் என்னும்
        இறந்தபின் நமைத்தின்றே அகங்காரம் பண்ணும்!

(வேறு)

கனற்பட்டும் கடுங்கறையான் கண்பட்டும் ஓடும்
        புனற்பட்டும் அழிபட்டும் போய்விட்ட சுவடி
முனம்பட்ட நிலைமையால் மூள்கின்ற நெருப்பு
        வனம்பட்ட மூங்கிலாய் வாடிற்று நெஞ்சம்!

(வேறு)

கடல்கொண்ட கவின்புகார் கதைகேட்ட நெஞ்சம்
        கரையற்ற சோகத்திற் கலங்குவது கண்டோம்!
மடல்கொண்ட பழஞ்சுவடி மறைந்தகதை கேட்டோம்
        மாய்ந்தபுகழ் மீட்பதற்கும் மனத்திண்மை பெற்றோம்!
இடர்கண்ட ‘தமிழக்கன்னி’ இன்னும் வளர் கின்றாள்!
        இன்றைக்கு நாம்காப்போம் இனியும் அவள் வளர்வாள்!
தொடர்கின்ற சரிதத்திற் புகழ்நிறுவி வெற்றித்
        துவசத்தை இமயத்தைத் தொடச்செய்வம் வாரீர்!

(வேறு)

தீயே! காற்றே! உம்மொடுநின்று சிரிக்குந் தமிழ்எங்கள்
        தாயே! அன்பே! ஆகிடும்! மற்றும் சரதம் ஆகிடுமே!
ஏயே! கடலே! அலையே! இன்றும் எந்தமிழ் அன்னைக்கு!
        வாயே ஆகி இருக்கின் றீர்நீர்! வாழ்த்துரை கூறுவிரே!

‘நல்லறம்’ - 1958