மழைத் துளி
‘தந்ததன’ மென்று
பந்தலில் - மலர்ப்
பந்தலில்
வந்து விழுந்தது நீர்த்துளி - மழை
நீர்த்துளி!
பச்சைப் பசுந்தழைக் காட்டிலே - இலை
மேட்டிலே
தைச்சுக் கிடந்தது புன்னகை - மழை
மென்னகை!
ஆழியின் உள்மனக் கூட்டிலே - சிப்பி
ஓட்டிலே
வாழிய வைகிய முத்துப்போல் - சுடர்
வித்துப்போல்
மின்னற் கொடிதந்த மொட்டுப்போல் - ஒரு
பொட்டுப்போல்
கன்னி யிளநகை வண்ணம்போல் - அவள்
எண்ணம்போல்
தொற்றும் மழைத்துளி கண்டுநான் - மயல்
கொண்டுநான்
முற்றுங் களிநடம் ஆடினேன் - இசை
பாடினேன்!
‘கலைமகள்’ - 1959
|