ஓட்டைப்படகு
துன்பம் என்ற கடலுக் கருகிலே
தொல்லை யென்ற கடற்கரை மீதிலே
என்பு தேய உழைத்திட்ட ஏழை போல்
ஏங்கி நிற்கும் படகொன் றிருந்தது!
கட்டி வைத்த கயிறு பிரிந்தது!
காற்றின் ஊளை நகைபுரி கின்றது!
ஒட்டி வைத்த பலகை கழன்றிட
ஓட்டை யாய்ப்பட கொன்று கிடந்தது!
மீனை அள்ளிக் கரையிற் கொணர்ந்ததும்
மேலும் தாவிக் கடலைப் புணர்ந்ததும்
சேனை யென்று திரையிற் குதித்ததும்
சென்ற காலம் விழுங்கிய சித்திரம்!
*வார ணம்என ஓடிய நாட்களில்
வாரிதி புகழ்ந் தேற்றிய நாட்களில்
தோர ணக்கொடி கட்டிய செக்கர்வான்
சொன்ன வாழ்த்தும் தொலைந்த பழங்கதை!
துக்கம் என்ற மணலைக் குவித்துளார்
சோறு செய்து சிறுவர் மகிழ்ந்துளார்
பக்கம் நின்ற படகும் சிரித்தது
பாடல் ஒன்றுமென் காற்றில் மிதந்தது!
‘இன்பம்’ என்றநல் சாயம் வடிந்தபின்
‘இளமை’ என்றபொற் மாயம் முடிந்தபின்
‘துன்பம்’ என்ற முதுமை அணைக்குமே
சோகம் வந்துநம் கையைப் பிணைக்குமே!
‘நல்லறம்’ - 1959
*வாரணம் - குதிரை
|