அணுவின்
ஆற்றல்
காலம் நமக்குக் கதைசொல்லப் போகிறது!
ஓலம் இடாதீர்! உதயம் பிறக்கிறது!
சின்ன அணுவாற் செகத்தை மயக்கிடலாம்
என்ன புதுமை! எலாமும் இயற்றிடலாம்!
பாலை நிலத்தைப் பழனமாய் மாற்றிடலாம்!
சோலை மலர்போற் சுகங்கண்டு போற்றிடலாம்!
வானச் சுடர்போலும் வாழ்வை வனைந்திடலாம்!
ஞானச் சுடர்மேலும் நாமே புனைந்திடலாம்!
துயரச் சுமையைச் சுழற்றி எறிந்திடலாம்!
புயலை இடரைப் புடைத்து நொறுக்கிடலாம்!
குருட்டைக் கிழித்தெறிந்து கோலச் சுடரால்
இருட்டைக் கிழித்துநாம் இந்திரர் ஆகிடலாம்!
அளத்தற் கரிய அணுவாற்றல் நம்மால்
கிளத்தற் கரிதுகாண்! கீர்த்தி பெரிதுகாண்!
நோய்வென்று வாழ்வின் நொடிவென்று மண்ணுலகத்
தாய்வென்று வாழும் தருமம் அணுசக்தி!
புத்துலகப் பேராற்றல்! பொங்கும் புதுமைகள்!
அத்தனைக்கும் ஊற்றாய் அமைந்த அணுவாற்றல்!
பாசி படிந்த பழங்கருக்கல் பேர்ந்துவிழ
ஆசியா, ஐரோப்பா பேதம் அறுந்துவிட
இன்பம், இனிமை இகமே சுகமென்றும்
துன்பம் ஒழிந்து தொலைந்த யுகமென்றும்,
எல்லைப் பிரிவுகளோர் என்மூக்காய் மாறிவிட
இல்லை பிரிவினைகள் “யாதுமூர்; யாவருமே,
|