கேளிர்” என மாறக் கீழ்நாடும் மேல்நாடும்
தோளிணைந்து நிற்கத் தொழில்வளம் ஊற்றெடுக்க,
யந்திரம் கொக்கரிக்க ஆலைகள் தாம்சிரிக்க
எந்திரத் தாலே எலாம்நடக்க எங்கெங்கும்
பொய், மடமை, பூதம், புராணம் தலைகவிழ
எய்தஅம்பு போலே இலக்கை அவையெய்த,
காணும் இடமெலாம் கற்பனை ஊற்றெடுக்க
ஆணும் எழிற்பெண்ணும் அன்றே சமத்துவமாய்,
விஞ்ஞானப் பூங்கா விரித்த மலர்களாய்
அஞ்ஞானம் நீக்கி அடிமைத் தளைபோக்கி,
காணாப் புதுயுகத்தின் காதல் பிறப்பெடுக்க
நாணாப் பழங்கொடுமை, நஞ்சுண்டு தான்மரிக்க,
ஆலயம் ஆக அணுத்தொழிற் சாலைகள்
வாலைக் குமரிபோல் வாழ்க்கை நமைத்தழுவ,
கையுழைப்பும் கால்உழைப்பும் காட்டடிமை போல்உழைத்த
மெய்யுழைப்பும் போயொழிய விஞ்ஞானப் பேரொளியால்
வேலை குறைய விருப்பம் நிறைவெய்த
சாலைதொறும் மக்கட் சதிராடும் நூல்கற்க,
ஆழியைப் போய்நீந்த ஆகாயம் கையேந்த
"வாழிய வையம்! வளர்க அணுவாற்றல்!
சூழிய நன்மை! சுடர்க பொதுவுடைமை!
வீழிய பேதம்! விளைக விடுதலையே!
என்றுமேல் அண்டங்கள் எல்லாம் முழக்கமிட
இன்றுநம் யாத்திரை இன்றே தொடங்கிவிட்டோம்!
|