பக்கம் எண் :

8தமிழ்ஒளி கவிதைகள்

கழைக் கூத்தாடி

“தோளில் அமர்ந்திடும் உங்கள் பிள்ளை - நல்ல
        தொட்டிலில் ஆடிடும் உங்கள் பிள்ளை!
காளியை நம்பிஎன் பிள்ளையதோ - அந்தக்
        கம்பத்தின் உச்சியில் தொங்குதையா!

தென்னை உயரத்துக் கம்பத்திலே - மிகச்
        சின்ன வயிற்றினை ஒட்டவைத்தே
மின்னியல் காற்றாடி சுற்றுதல்போல் - அதோ
        வேகமாய்ச் சுற்றுதே என்குழந்தை!

திண்ணைமே லோரத்தில் உம்குழந்தை - தன்னைச்
        செல்ல விடுதற்கும் அஞ்சிடுவீர்!
அண்ணாந்து பாருங்கள்! ஆகாசத்தில் - என்றன்
        ஆசைக் குழந்தையும் சுற்றுவதை!

உச்சியி லேஒரு சின்னக்கம்பி - அதில்
        ஒட்டிய வட்டத் தகரத்திலே
குச்சி உடலொன்று சுற்றுதையா! - விசை
        கொஞ்சம் தவறிடில் மிஞ்சிடுமோ?

பாழும் வயிறு வளர்த்திடவே - இந்தப்
        பாடுகள் பட்டிடும் எங்களுக்கே
கூழு மில்லை! ஒரு சல்லிதந்தால் - வெற்றுக்
        கும்பியின் பட்டினி தீருமையா!”

மேளத்தைப் போலவன் தன்வயிற்றைத் - தட்டி
        மீறிய சோகம் எழுப்புகிறான்!
வாளில் நடப்பது போல் சிறுவன் - பெரும்
        வாதை யுடன்அங்குச் சுற்றுகிறான்!

பெற்றமனம் அச்சம் கொள்கிறது - துக்கம்
        பீறிட்டுத் தொண்டை அடைக்கிறது!
சுற்றிலும் நிற்பவர் தம்மிடையே - அவன்
        சோகக் குரலினில் கெஞ்சுகிறான்!