கும்பலை நோக்குவான் ஒற்றைக்கண்ணால் - தன்
குழந்தையை மற்றொரு கண்ணில் வைப்பான்!
தெம்பிழந் தாடும் உடல்சுமந்தே - மிகத்
தேங்கித் தள்ளாடி நடந்திடுவான்!
“சிரித்து மகிழ்ந்திங்கே நின்றிருக்கும் - பெருஞ்
செல்வர்கள் சிந்தை இரக்கமுடன்
விரித்திருக்கும் இந்தக் கம்பளத்தில் - அன்பால்
வீசிடு வீர்பல காசுகளை!
கண்கள் படைத்தவர் நெஞ்சிரங்கி - ஒரு
காசு கொடுத்தெமைக் காத்திடுங்கள்!
பெண்களை ஆண்களைப் பெற்றவரே - கொஞ்சம்
பெரிய மனம்வைத்துக் காத்திடுங்கள்!”
பிச்சை யெடுத்திட வைத்திருக்கும் - இந்தப்
பேதைச் சமூகத்தில் வாழ்பவர்கள்
பச்சைக் குழந்தையின் ரத்தங்கண்டும் - அங்குப்
பாதகர் நெஞ்சிலே ஈரமில்லை!
கிழவன் குரல்மிகக் கெஞ்சியது - பிச்சை
கேட்டுக் கேட்டுமனம் ஓய்ந்துவிட்டான்!
கழையின்மேல் சுற்றிடும் பையனுக்கும் - அங்கே
கால்களும் கைகளும் சோர்ந்தனவே!
கிழவன் விழிகளை அம்புகொண்டே - குத்திக்
கீறுதல் போன்று துடித்துவிட்டான்!
நழுவுது சுற்றிய வேகத்திலே - பிள்ளை
நல்லுடல் லாவகம் தப்பியதே!
ஓங்கி வயிற்றில் அறைந்து கொண்டான்!-மிக
ஓலமிட் டந்தக் கிழவனுமே!
தாங்காமல் பையனின் பாரத்தையே - கம்பம்
தள்ளிவிட்டே, திகில் கொண்டதடா!
|