நெய்வேலி நாம் பெற்ற பேறு
அரிய நிலக்கரியே! ஆசையே! முன்னாட்
பெரிய மரங்கள் பெயர்ந்துவீழ்ந் துட்புதைய
மண்ணுள், அதன்வயிற்றுள் மாயமாய்த் தோன்றியநீ -
எண்ணுள், அடங்கா இடங்கொண்டு கண் துயின்று
பன்னாள் உறைந்து படிவங்கள் ஆயினாய்!
முன்னாள் அறிய முதல்தந்தாய் இன்றைக்கே!
மண்ணுள் மறைந்த மனிதன் அலாவுதீன்,
கண்ணுள் ஒளிகாட்டிக் கையில் விளக்கேற்றி,
நெய்வேலி மண்ணில் நிலக்கரியாய் நிற்கின்றான்!
மைவான் முகில்போன்றும் மாயப் பசுபோன்றும்
கற்பகம் போன்றும் கருதியவை நல்கவே
முற்பட்டான்! பாரீ ர்! முகிழ்க்கும் நிலக்கரியாய்!
மூங்கிற் பெருங்காடு முன்னங் குழல்தந்து,
வீங்கி வளர்ந்து, விழுந்து, விறகாகி
அழுந்தி அடிமண்ணுள் அங்கே கிடந்து
பழுப்பு நிலக்கரியாய்ப் பாய்ந்தெழுந்த விந்தைதனைத்
தென்னாடு கண்டு சிலிர்ப்பெய்த ஆம், இன்று
பொன்னான நேரம், புதுநாள் பிறந்துளது!
பச்சைப் பயிர் விளையப் பக்குவம் ஆனஉரம்
இச்சைப் போல்எங்கும் இயற்றுவதும், மின் விசையை
ஆக்கி எமக்கே அளிப்பதும், பேரிருள்
போக்கி ஒளியைப் பொழிவதும் செய்யவல்லாய்!
ஊர்திகளும் கப்பலும், உற்பத்தி ஆலைகளும்,
பேர்பெற் றியங்கப் பெரிதும் பயன் நல்கும்
எங்கள் நிலக்கரியே! ஏழை மடிதவழ்ந்த
தங்கக் குழந்தாய்! தமிழ்நாட்டுத் தாய்வளமே!
பொன்னால் மணியால் புகழ்முத்தால் என்ன பயன்?
உன்னால் புகழ்பெற்றோம்! ஓ, ஓ! உலகிடையே!
|