நாட்டின் இளைஞர்காள்! நல்ல இலக்கியங்கள்
தீட்டும் அறிஞர்காள்! தென்னக மைந்தர்காள்!
கூனல் விழுந்து குமைகின்ற நம்நாடு
வானம் வரைவளர்ந்து வான்மதியைத் தன் முடியில்,
சூடி மகிழத் துணைசெய்யும் நெய்வேலி!
பாடி நடப்பீர் பறவை இனம்போலே!
நாட்டின் எதிர்காலம் நமைப்புகழத் தென்னாறு
காட்டின் பெயர்விளங்கக் கல்வி, கலைவளர
ஈன வறுமை இருள்அகல எவ்விடத்தும்
ஞானச் சுடர்விளைய நன்னும் இடர்களைய
“உழைப்பால் நம்நாட்டை உயர்த்தலாம்” என்றே
அழைப்பிதழ் நீட்டி அழைத்ததுகாண் நெய்வேலி!
காடு கரம்புகள் காணாக் கனவெய்தி
நாடு நகர்களாய் நாட்காலை மாற்றமுற
வாழ்வை உவந்தளிக்கும் வையப் பெருநிதியே!
தாழ்வு தொலைக்கும் தனிச்சுடரே வாழியநீ!
‘பாரதம்’ - 1960
|