தென்னம் பந்தல்
வானக் கருமுகில் மீது செழுங்கதிர்
வந்து படுகின்ற வேளை
வெடித்தது தென்னம் பாளை!
ஞானக் குமரி நகைத்தனள் பார், அதோ
நாற்புறமும் தென்னஞ் சோலை!
நன்கு விடிந்திடுங் காலை!
மட்டைக் கரங்கள் விரித்தந்தத் தென்னைகள்
வைகறை யைவர வேற்கும்!
‘வா’ என்று தான்ஒலி சேர்க்கும்!
நிட்டை கலைந்து குருத்தென்ற வாள்முனை
நீட்டிஆ காயத்தைத் தாக்கும்!
நெஞ்சினிற் கள்வெறி சேர்க்கும்!
கும்பங்கள் என்கின்ற காய்கள் எடுத்துவிண்
கோமகனை எதிர் கொள்ளும்!
கொஞ்சும் இளநகை துள்ளும்!
அம்பரந் தன்னை மறைக்கும் பெரும்பந்தல்
ஆடி யசைந்தது பாராய்!
அன்பொடு கண்டிட வாராய்!
‘அமுதசுரபி’ - 1961
|