நற்கலைஞர் சண்முகம்
நடுவணரசு விருது பெற்றார்!
பணத்திற்குக் கைநீட்டும் உலகில் நாட்டுப்
பண்பிற்கே கைநீட்டிப் பரிசு பெற்றார்!
குணத்திற்குக் குன்றானார்! கொள்கை சொல்வேன் :
கோலெடுத்து வந்தார்க்குக் கால்பி டித்துக்
கும்பிட்டு நிற்கின்ற கூனன் கூடக்
கணத்திற்குக் கணம், ராஜ ராஜ சோழன்
கால்வழியை நினைத்தெழுந்து கனல் பறக்கப்
“பிணமல்ல நான்” என்று பிளிறு மாறு
பெரியநா டகங்கண்ட பெருமை யாளர்!
பழநாளில் ஆட்சிசெயும் உரிமை பெற்றுப்
பன்னாளும் அவ்வுணர்வை உள்ளந் தேக்கி
அழல்எரியும் அவ்வண்ணம் உணர்ச்சி பொங்க
ஆர்க்கின்ற தமிழ் இனத்தை அணைத்துச் செல்வார்!
தொழநின்ற தலைவர்சிவ ஞானம் அந்தத்
தூயோரின் ஆயநெறி துணையாய்க் கொண்டு
முழங்குகின்ற கலைக்களிறு சண்மு கத்தை
முப்பொருளாய் வாழ்க! என வாழ்த்து கின்றேன்!
‘கவிதை’ - 1962
|