கார்த்திகை விளக்கு
கங்குல் இருளிற் கவின்மணிபோல், புன்னகைபோல்
எங்கள் குடிலில் எழிற்கோலந் தீட்டுகின்ற
சின்னஞ் சிறுவிளக்கைச் சித்திரத்தைக் கண்டீரோ?
என்ன வியப்பென்றே என்னெஞ்சம் கூத்தாடும்!
கீர்த்தி, இளமை, கிழியாப் பழம்பெருமை
சீர்த்தியிவை நான்கும் சிறப்புருப் பெற்றதுபோல்,
தென்னையின் பாளை சிதறும் புதுமலர்போல்
பொன்னை உருக்கும் புதுமைபோல், மற்றும்
அகழ்வாரைத் தாங்கும் அவல நிலத்திற்
புகழ்உருவம் ஒன்று புறப்பட்ட தோற்றம்போல்
பொய்யே மலிந்த புலையிடையே நன்னெஞ்சம்
‘ஐயோ!’என் றேங்கி அழுதகண் ணீர்த்துளிபோல்
போர்த்திய கார்இருளிற் போட்டதோர் முத்தாகிக்
கார்த்திகைப் பெண்ணேந்தும் கைவிளக்காய் மெய்விளக்காய்த்
தென்றலில் ஆடித் திசையில் இசைபரவ
முன்றிலில், மற்றும் முனைமுகட்டில் ஊசலிடும்!
சற்றே அமர்ந்து, தனித்திருந்து, தன்னுணர்வு
பெற்றே சிறுதீப் பிறக்கப் பறக்குங்காண்!
பிரிந்தார் அகத்திற் பிறந்ததோர் வேட்கை
எரிந்த பொரியாகி எங்கும் பறந்ததுபோல்,
நெற்றித் திலகம் நிறம்பெற் றெழுந்ததுபோல்,
சுற்றித் திரிந்து சுடர்கின்ற பொன்விளக்கு!
சொல்லுக் கடங்காது தோன்றுகின்ற கற்பனை போல்!
அல்லுக் கடங்காத ஆனந்த மின்விளக்கு!
ஐப்பசித் தூதை அனுப்பிவைத்துக் கார்த்திகையைக்
கைப்பிடித்த வானின் ககனத் திருவிளக்கு!
பூவின் இதழ்ஒன்று பொன்சிறகு பெற்றதுபோல்,
நாவின் சிறுசொல் நறுக்குப் போல், நல்லோர்கள்
வாழும் இடத்திற்கு வாழ்த்தாகி வான்விருந்தாய்ச்
சூழும் சுடர்போன்ற தோற்றங்காண்! மின்மினிகாண்!
‘கலைமகள்’ - 1963
குறிப்பு :
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பறந்து திரியும் மின்மினிப்
பூச்சியைப் பற்றிய கற்பனை இது.
|