பக்கம் எண் :

87தமிழ்ஒளி கவிதைகள்

கம்பனுக்குக் காணிக்கை

ஒல்லென்ற ஒலிகொண்டே ஓடிவரத் தமிழ்வெள்ளம்
நில்லென்று தடுத்துன்றன் நெறியே அதைத்திருப்பி
வெல்லென்ற குரலெடுத்து விசையூட்டிக் கடலாக்கிச்
செல்லென்று விடுத்தனைநீ திசைவணங்கி வரவேற்க!

திசைவணங்கும் உன்பெயரைத் திருவணங்கும் உன்சொல்லை
இசைவணங்கும் செந்தமிழின் இயல்வணங்கும் திறல்வீமன்
தசைவணங்கும் கட்டுடலைத் தரைவணங்கி நின்றதுபோல்
மிசைவணங்கும் உன்பாட்டை மிகவணங்கி வாழ்த்துவனே!

பண்ணுக்குப் பண்தந்தும் பயன்தந்தும் செந்தமிழர்
கண்ணுக்குக் கண்தந்தும் கதிதந்தும் நீசென்ற
விண்ணுக்கு மதிதந்தும் விறலிக்கே இகழ்தந்தும்
எண்ணுக்குக் கடல்தந்தும் எமக்கிதயந் தந்தாய்நீ!
கிழமுனிவர் வான்மீகி கிளர்ந்தஇரா மாயணத்தை
பழமுனிவர் மனமகிழப் பாடியதும் அன்றியதோர்
மழகளிறு போற்புதுமை மார்க்கத்தும் நீசென்றாய்
அழகென்ற ஒருபொருளின் அவதாரம் உன்கவிதை!

இமஉச்சி உன்புகழின் எதிர்உச்சி ஆகாமல்
குமைகின்ற கண்ணீரே குளிர்கங்கை ஆறையா!
இமைபோலும் கண்போலும் எழுகின்ற விண்போலும்
அமைகின்றாய்; உன்புகழின் அந்தத்தை யார்அளந்தார்?

சந்தத்தின் இசைப்பாதந் தானெடுத்துத் தமிழ் உலகை
இந்தவண்ணம் என்றளந்த எம்பிரான் தந்தவண்ணம்
வந்தவண்ணம், நாமென்றும் வாழ்ந்தவண்ணம் ஆகிடுமே!
அந்தவண்ணம் அறியாதார் யார்வண்ணம் அறிவாரோ?

‘கலைமகள்’ - 1964