பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 88

உயிர்கொண்டு உலவுகின்றான்!

‘பாரதி தாசன் உயிர்துறந் தார்’எனப்
பக்கத்தி லுள்ளவர் பேசிநின்றார்-அவர்
சீரறி யாமல் பிதற்றுகின் றார்எனச்
சொல்லியே நானும் நடந்துசென்றேன்!

‘சென்னையி னின்று பிணம்வரும்’ என்கின்ற
செய்தியைச் சிற்சிலர் பேசிநின்றார் - அவர்
சொன்னது கேட்டுக் கொதிப்படைந்து, ‘வெறும்
சொத்தைகள்’ என்று வழிதொடர்ந்தேன்!

உயிரில் உணர்வில் கலந்த கவிஞன்என்
உயிரில் உயிர்கொண் டுலவுகின்றான்! - வெறுந்
துயரில் நான்மூழ்கிக் கிடக்கவில்லை, அவன்
தொண்டு சிறந்திடத் தொண்டுசெய்வேன்!

‘காந்திவழி’ - 1964