பக்கம் எண் :

89தமிழ்ஒளி கவிதைகள்

கவிஞர் கோமான்

கொடியின்றி முடியின்றிக்
       குலைகின்ற தமிழ்வாழ்வைக்
       கொன்றதன் ஆணிவேரை
அடியின்றிக் கெல்லிடச்
       சூழ்ந்தவர் நெஞ்சினில்
       ஆணிகொண் டறைந்து, சிங்கம்
அடியூன்றி நின்றுகண்
       அழற்பொறி பறந்திட
       ஆர்க்கின்ற அவ்வண்ணமாய்,
இடிகொண்ட குரலினால்
       எழுப்பினான் தமிழரை
       எந்தைபா ரதி தாசனே!

‘அடிமைகொள், எனை!’ என்று
       புலவன் ஒவ்வொருவனும்
       அயலவன் கால்பிடிக்க,
மிடிமைகொள் வாழ்விலும்
       ‘செந்தமிழ்க் கெதிரிஎன்
       எதிரிதான்!’ என்றுகூறிக்
குடிமையும் கொற்றமும்
       ஏதடா தமிழன்னை
       கொடியின்றி நிற்கும்நாளில்
ஒடிகின்ற செடியல்ல
       ஆலடா தமிழ்என்
       றுணர்த்தினான் கவிஞர்கோமான்!