இடங்கள் தோறும் சிறந்த
தடங்கள் தரப் பிறந்த
தாமரை, குமுதம்பூத்து நிற்குமே - அலை
தத்திப் பிடிக்க நடை கற்குமே!
திண்ணோடி நின்றிடு மரம்
கண்ணாடி ஏரியில் முகம்
தெரியப் பார்த்துக்கொள்ளவு முந்துமே - அது
சிரித்துக் கொண்டதுபோற் பூசிந்துமே!
கொடிகள் விடுத்த மலர்ப்
பொடிகள் பறந்து காற்றிற்
குளிர்ந்த மணங்குழைத்துப் பூசுமே - மார்பு
கொடுத்த தரங்கம் காதற் பேசுமே!
சுற்றியிருந்த வனத்திற்
சுற்றிய யானையும் மானும்
தோழமை வளரச்சுற்றிப் பார்க்குமே - உரோகிணி
சொல்லிய கதை ஒற்றுமை சேர்க்குமே!
|