பக்கம் எண் :

93தமிழ்ஒளி கவிதைகள்

உரோகிணியின் பாடல் :

(வேறு)

காட்டிடை ஒருமகள்
மீட்டிய யாழ்போற்
‘கலகல’என் றோடும் - உரோகிணி
காற்றோடு பண்பாடும்!

மலைகளின் மறைபொருள்
அலைகளிற் கொஞ்சிட
‘மடமட’ என் றோடும் - நெறி
‘நடநட’ என் றோடும்!

முதன்முதற் கனவினிற்
புதல்வனை ஈன்றவள்
முகமென மகிழ்ந்தோடும் - அன்
பகமென நெகிழ்ந்தோடும்!

விதியினை வென்றிடும்
புதியன செய்திகள்
வித்திட விரைந்தோடும் - நீர்
முத்திட இரைந்தோடும்!

இயற்கையின் எழிலிடை
செயற்கையின் சிறப்பென
இருந்தது திருக்கபிலை - புகழ்
இயம்பிட நதியின்அலை!

*உரோகிணி :உரோகிணி ஆறு; இது கங்கையின் கிளைகளில் ஒன்று.