சுத்தோதனர் :
இரட்டுற ஆயிரம்செல்ல
இயன்றஐந் நூறு கொள்ள
இணைந்த ஆண்டு கட்குமுன்
திரட்டுற ஆண்ட அரசர்
சாக்கியர் திகலம் என்ற
சீர்மிகும் சுத்தோதனர் என்பார்!
சுத்தோ தனர்புகழைச்
சுருக்கி உரைப்பதெனிற்
சொற்கள் அடங்குவதில்லை!
பித்தோ டுரைக்கமனம்
பெரிதும் விரைந்துசெலப்
பேச்சை அடக்குவதெவண்?
அறம்என் கின்ற கொடி
அந்நகர்க் கோட்டையில் ஏறி
அசைந்து பறக்கக் கண்டதும்
புறங் கொடுத்துப் பகைமை
போனது மிகப் பழமை!
புதுமை அதனின் உண்டுகொல்?
மன்னர் தமை மணந்த
மனைவியர் இருவர்!
மாயா தேவி! கௌதமி
அன்னவர் மகப்பே றின்றி
அரச ரொடு வருந்தி
அடைந்த துக்கமும் பெரிது!
|