பக்கம் எண் :

10தமிழ்ஒளி கவிதைகள்2

விடுதலையின் உறவு

அடங்குதலும் பிறர்தம்மை அடக்குதலும் அற்ற 
       அறமொன்றே விடுதலையின் உறவென்று கொள்வோம்!
திடங்கொண்ட ஒருமனிதன் மெலிந்தோரைத் தாக்கித் 
       தீரன்எனப் புகழ்பெறுதல் சிறுமையினுஞ் சிறுமை!
கடமையெண்ணித் தாய்நாட்டை உயர்த்துகின்ற செயலால் 
       காசினியிற் பிறருரிமை பறிப்பதுதான் அறமோ?
அடல்கொள்நெப் போலியனும் ஹிட்லரும்இச் செயலால் 
       அழிந்துபழி யேற்றதனைப் புவியறிந்த தன்றோ?

பெருமீன்கள் சிறுமீனை விழுங்குவது போலே 
       பெருநாடு சிறுநாட்டை அடக்குவதும் கண்டோம்!
ஒருபழியும் அறியாத சிறுநாட்டு மக்கள் 
       உரிமையினைப் பறிக்கின்ற ‘பெரு’ நாட்டில் வாழும்
பெரும்பான்மை மக்காள்நீர் இச்செயலை ஒப்பிப் 
       பேசாமல் இருக்காதீர்; எதிர்த்திடுதல் வேண்டும்!
பெருங்கொடுமைப் படுவோர்கள் உம்நாட்டைக் கொடிதாய்ப் 
       பேசிடுவர்; இதுமனிதர் மனத்தியல்பே ஆகும்!

பிற்போக்குச் சக்திகளை முறியடிக்க இன்றே 
       பெருங்கடலாம் தொழிலாளர் புரட்சிஎனும் புயலைத்
தற்போதே எழுப்பிடுக! தவறிவிட வேண்டாம் 
       தரைமீதில் சுமையாக உள்ளமுத லாளி
கற்பாறை யென்றேநீர் கருதற்க! உமது 
       கைஓங்கிக் கொடுக்கின்ற அறைபட்டுப் பொடியாய்ப்
புற்பனிபோல் பொலபொலென உதிர்ந்திடுவான்; இன்றே 
       புறப்படுவீர்! நானுங்கள் புகழ்பாடு கின்றேன். 

‘ஒளி’ - 1948

குறிப்பு: ‘பெரு’ நாட்டில் நேர்ந்த அமெரிக்க முதலாளித்துவ கொடுமைகளைக்
கண்டித்து எழுதப்பட்டது.