பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 9

கடவுளின் பேரால்

சிதம்பரத்தில் நடராஜர் ஆல யத்தில் 
       செம்பொன்னால் செய்திருக்கும் நந்தி யின்வால்
எதனாலோ ஒடிந்துவிட ஓடோ டிப்போய் 
       இரண்டேகால் கோடியினைச் செலவ ழிப்பார்
முதலாளி அழகப்பர், ஆனால் ஆலை 
       மூடியதால் கூழின்றி நோய்வாய்ப் பட்டுக் 
கதறுகிற தொழிலாளர் தமக்குச் செல்லாக் 
       காசையுமே தருவதற்கும் ஒப்ப மாட்டார்!

திருப்பதியி லிருக்கின்ற கடவு ளுக்குச் 
       சிலைமுடியில் பனிபட்டால் சளிபி டித்து
வரும்காய்ச்சல் எனப்பயந்து பக்தர் கூட்டம் 
       வைரமுடி தனைச்செய்து மாட்டும்! அந்தோ
தெருப்புழுதி தனில்அவர்கள் வீட்டின் முன்னே 
       சிரங்கினின்று சீழொழுகச் சொரி பிடித்து
வருத்தமுற்றுக் குளிராலே ஆடை யின்றி 
       வாடுகிற மனிதர்களைத் திரும்பிப் பாரார்!

கும்பாபி ஷேகம்எனச் சொல்வார்; கோயில் 
       குளமெடுக்க மிகுந்ததொகை செலவழிப்பார்!
கும்பியிலே பசிநெருப்பு மூண்டெ ரிக்க 
       குழந்தைகளும் மனைவியரும் துடிக்க ஏழை
தெம்பின்றி விழுந்திடுவான் அவர்கள் முன்னே! 
       ‘செய்தவினை’ ‘விதி’ யென்றே சொல்லி விட்டு
எம்பிரான் நாமத்தை ஜெபிப்பார் மூடர் 
       இன்னஇவர் மனிதர்களாம் வாழுகின்றார்!

இவ்வாறு செய்கின்ற இவர்க ளெல்லாம் 
       இருட்டுகிற நேரத்தில் ஏழைப் பெண்கள்
செவ்வையுறு கற்பழித்துத் திரிவார்; மிக்க 
       திண்டாடும் தொழிலாளர் தமக்கு நன்மை
எவ்விதத்தும் செய்துதர ஒப்பார்; நாட்டில் 
       இருக்கின்ற மடமையினால் கடவுள் பேரால் 
‘திவ்வியர்கள்’ புண்ணியர்கள்’ எனப்பேர் பெற்றுத் 
       திரிகின்றார், திருடரிவர்! அறிந்து கொள்வீர்!

‘போர்வாள்’ - 1948