|
சுதந்திரம்
மண்குடில் வாழ்த்திடும் ஏழையும் - ஒரு
மாளிகை வாழ்ந்திடு செல்வனும்
அண்ணனும் தம்பியும் என்றிடில் - துயர்
ஆக்கிடு பேதம் பொருந்துமோ?
கண்ணெனப் போற்றும் சுதந்திரம் - இந்தக்
கர்ஜனையை எட்டுத் திக்கிலும்
விண்ணிடி யென்ன முழக்கிடும் - உயர்
வேதப் பொருளெனக் கூறுவேன்!
இந்திய நாட்டினை ஆண்டுமே - மிடி
ஏழ்மை பெருக்கிய வெள்ளையர்
கொந்திடு பேதங்கள் ஆக்கியே - நமைக்
கொள்ளை யடித்தனர் பாவிகள்!
வந்தனன் காந்தியிம் மண்ணிலே - இருள்
வானிடை மின்னலைப் போலவே
நொந்திடு பேதங்கள் தீரவே - பெரு
நோன்பு சுதந்திரம் வேண்டினன்.
இந்திய மக்கள் எழுந்தனர் - அவன்
எண்ணங் குளிர்ந்திடப் போரிலே
தந்தையர் அன்னையர் மூத்தவர் - அவர்
தம்முடை மக்களும் பேரரும்
சிந்திய ரத்தம்பெருங்கடல் - அவர்
தியாகக் கதைஒரு பாரதம்
செந்தமிழ் நாட்டிடைப் பாரதி - இதைத்
தேன்கவி கொண்டு துதித்தனன்!
‘நாற்பது கோடியும் ஓருரு’ - என
நானிலம் கண்டு சிலிர்த்தது!
மாற்றவர் அஞ்சி நடுங்கிட - கடல்
மாப்படை வீரர் எழுந்தனர்!
காற்றினைச் சாடும் விமானமாம் - அதன்
கண்ணுறும் வீரரும் கூடினர்!
கூற்றைச் சிரிக்கும் தரைப்படை - இந்தக்
கொள்கையில் ஒற்றுமை கண்டது!
|