பக்கம் எண் :

12தமிழ்ஒளி கவிதைகள்2

மக்களும் அன்னவர் பக்கலில் - இந்த 
மாப்படை வீரரும் சேர்ந்தனர்!
‘தக்கக்’ கெனப்பறை கொட்டியே - இதைச் 
சாற்றினன் காலத்தின் தூதுவன்
‘கக்கக்’ கெனநகை செய்தனன் - இதைக் 
கண்டு நடுங்கினர் வெள்ளையர்
‘பொக்’ கென ஆணவம் வீழ்ந்திட - சிறைப் 
பூக்கள் யாவும் தெறித்தன!

நற்றவ மான சுதந்திரம் - மறு 
நாளில் பிறந்தது ஜோதிபோல்
புற்றடி மையிருள் கூட்டினை - ஒரு 
பொற்கதிர் வெட்டி மடித்தது
ஒற்றுமை சாதித்த வெற்றியை - உயர் 
உண்மையை மாநிலம் கண்டது
தெற்றெனக் காலை விடிந்தது - புது 
சேதியை மாந்தர்கள் கேட்டனர்!

(வேறு)

நாழிகை யொன்றினில் நஞ்சடி மைத்துயர் 
       நைந்து மடிந்துவிட,
நாண்மலர் போல்வரும் நல்ல சுதந்திரம் 
       நம்மவர் சொந்தமடா!
கூழிலை யென்றினி கெஞ்சிடு மாந்தரின் 
       கூக்குரல் கேட்டிடுமோ?
கொள்ளை யடித்திடு வோர்செயும் வஞ்சகக் 
       கொள்கை உயர்ந்திடுமோ?
வாழிய என்றுநம் வாழ்த்தொலி கேட்டிட 
       வாழ்ந்திட வேண்டுமடா
வறுமை யுறுந்தொழி லாளரும் ஏழையும் 
       வாழ்வுற வேண்டுமடா
வாழிய அன்னவர் சங்க முயர்ந்துமே 
       வாழிய வாழியவே!
வாழிய அன்னவர் வாழ்வை உயர்த்திடும் 
       வண்மைச் சுதந்திரமே!