|
(வேறு)
உழவர்க்கும் தொழிலாளர் தமக்கும் துன்பம்
உறுகின்ற யாவர்க்கும் சுதந்திரத்தை
வழங்கிடுக எனச்சொன்ன தியாக வீரர்
மணிமொழியை இந்தியர்கள் மறக்க மாட்டார்
‘விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாய மாட்டோம்
வீணர்க்கே உழைத்துடலம் ஓய மாட்டோம்’
முழக்கமிடும் பாரதியின் பள்ளுப் பாடல்
சுதந்திரத்தின் முழுப்பொருளை நமக்குச் சொல்லும்!
சுதந்திரத்தின் முழுப்பொருளைக் கண்டு கொண்டோம்
சோம்பேறி வீணரெலாம் இனியும் தேச
முதலாளி எனும்உரிமை பேசிக் கொள்ளும்
முறைமையினை ஒழித்திடுவோம், எல்லோருக்கும்
பொதுவான செல்வத்தை ஒருவன் வீட்டில்
பூட்டிவைத்த ஆதிக்கம் வெட்டிச் சாய்ப்போம்!
புதுயுகத்தில் மக்கள்நலன் மக்கள் கையில்
பொதுவுடைமை நல்வாழ்வே அனைவ ருக்கும்!
(வேறு)
பித்தன் எனக்கெடும்
மானிடன் - தெருப்
பிச்சை யெடுத்திடும் சின்னவன்
பொத்தற் குடிசையில் வாழ்பவன் - எனும்
புன்மைக் கொடுமைகள் வீழ்ந்திட
சத்திய நீதி பிறந்திடில் - அது
தான்இந்த நாட்டின் சுதந்திரம்!
அத்தனை பேரும்என் சோதரர் - அவர்
அத்தனை பேரும் சுதந்திரர்!
பழுதுப டாதிங்கு வாழ்க்கையைத் - தழைப்
பச்சையைப் போல்வள மாக்கிடும்
உழவர் தொழிலாளர் தம்குலம் - இன்பம்
உற்றிடும் ஆட்சி பிறந்திடில்
மழலைத் தமிழ்கொண்டு பாடுவேன் - அந்த
மாண்பு சுதந்திரம் தேடுவேன்
அழுகையும் துன்பமும் அற்றிடப் - புவி
ஆளும் சுதந்திரம் வேண்டுவேன்!
|