பக்கம் எண் :

14தமிழ்ஒளி கவிதைகள்2

(வேறு)

இந்திய நாடு பெற்ற
இனியதாம் சுதந்தி ரத்தை
எந்தவோர் சக்தி யேனும்
இழித்திட முயற்சி செய்தால்
அந்தநாள் ரத்த வெள்ளம்
அணைகடந் தோடும் நாளாம்
நொந்தவர் வாழ்க்கை இன்னும்
நொந்திட விடவே மாட்டோம்!

சுதந்திரம் - உழைப்ப வர்க்கே!
சுதந்திரம் - எளிய வர்க்கே!
மதத்திமிர் - சாதிக் கூச்சல்
மக்களில் உயர்வும் தாழ்வும்
மதர்த்தெழும் அடிமை வாழ்வு
மடிந்தபின் துன்ப முற்றுக் 
கதறிடும் குரல்எ ழுந்தால்
கடும்புயல், புரட்சி வீசும்!

சுதந்திரம் - பல்லாண் டாகத்
துயரிலே கிடந்த வர்க்கு!
சுதந்திரம் - சிறைக் கூடத்தில்
தூக்கினில் மடிந்து மேலாம்
பதம்பெறும் தியாக வீரர்
பரம்பரை தனக்கு - வெற்றுப்
பதவியும் பணமும் கொண்ட
பதர்களுக் கல்ல சொன்னேன்!
ஏடுகள் இதழ்கள் யாவும்
எவ்விதத் தடையு மின்றி
வீடுகள் தோறும் சென்று
விளங்கிடல் வேண்டும் - இங்குக்
கோடுயர் மேடை யேறிக்
கொள்கையைப் பேசு தற்கும்
பீடுற எழுது தற்கும்
சுதந்திரப் பெருமை வேண்டும்!