பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 15

பதந்திரு பெற்று நாட்டுப்
பாங்குளார் வாழ்வ தற்கும்
நிதம்உழைத் திடுவோர் வாழ்வு
நீணிலம் பெறுவதற்கும்
விதந்தரு கோடி யின்னல்
விளைவதை யொழிப்ப தற்கும்
சுதந்திரம் எனக்குத் தேவை
சுரண்டியே வாழ்தற் கல்ல!

பறவை போல், காற்றினைப் போல்
பாரினில் வாழும் இன்ப
அறத்தினைக் கட்டி லாத
ஆனந்த சுதந்தி ரத்தை
பிறவியின் உரிமை தன்னைப்
பெற்றபின் அதனைக் காக்கும்
திறமிலார் புழுவைப் போன்றார்
சிறியநா யினுங்கீழ் ஆவார்

அந்தவோர் சுதந்தி ரத்தை
மறுப்பவர் அராஜ கத்தால்
இந்திய உபகண் டத்தில்
இருப்பரேல் அவரின் ஆவி
வெந்திடும் உரிமைப் போரில்
வீழ்ந்திடும் அவர்தம் வாழ்வு
சொந்தமாம் இந்த நாட்டின்
சுதந்திரம் அனைவ ருக்கும்!

இந்திய உபகண் டத்தில்
இணைந்துள இனத்தார் எல்லாம்
இந்தவோர் சுதந்தி ரத்தை
எய்திடப் பல்லாண் டாக
நொந்தவர் - அவர்க ளின்று
சுதந்திரம் நுகர வேண்டும்
செந்தழல் குளித்த அன்னார்
தீரமோர் காவி யம்ஆம்!