பக்கம் எண் :

16தமிழ்ஒளி கவிதைகள்2

(வேறு)

என்னருமைத் தமிழ் நாட்டில் 
       சிதம்பரத்தின் நாமம்
என்றைக்கும் வாழும், அவன் 
       எங்கள்குல வீரன்!
சின்னவர்கள் வெள்ளையர்கள் 
       நெஞ்சமெலாம் அஞ்ச
சிங்கமெனக் கார்கடலில் 
       கப்பலினை ஓட்டித்
தன்னுரிமை காத்ததொரு 
       வரலாற்றுப் பெருமை
தமிழ்நாட்டில் இறவாமைப் 
       புகழோடு சேரும்!
என்னவெனச் சொல்லிடுவேன் 
       அன்னவனின் தியாகம்
இன்றைக்கு நினைத்தாலும் 
       நீர்பெருகும் கண்ணில்!

மலைபோன்ற செக்குதனை 
       நூலெழுதுங் கையால்
மனஞ்சிறிதும் தளராமல் 
       இழுத்துடலம் குலைந்தான்
தலைகாய வெய்யிலிலே 
       கல்லுடைத்த துண்டு
தண்டனையும் சவுக்கடியும் 
       பட்டதுவும் உண்டு! 

புலைநெஞ்ச வஞ்சகரால் 
       பட்ட துயர் அந்தோ
புகலவெனில் அகமுருகித் 
       தழலாகி வேகும்!
தொலையாத அடிமையினைத் 
       தொலைத்துவிட இன்ப
சுதந்திரத்தை நாடுபெறத் 
       தியாகங்கள் செய்தான்!