பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 17

கொடுமையிலே உயிர்தோற்றுக்
கொள்கையிலே வென்று
கொடிகாத்த குமரனைஎம்
தமிழரெலாம் அறிவார்!
தடுமாறும் தன்இனத்தின்
சுதந்திரத்தை வேண்டி
தணியாத ஆவலுடன்
ஆவிபொருள் ஈந்தான்!

அடைந்ததொரு சுதந்திரம் அன்
றவர்செய்த சேவை!
ஆம்!இதனை இந்தியரில்
எவன்மறுக்கத் துணிவான்?
அடைக்காதீர் தேசீய
இனத்தாரை இனியும்
ஆதிக்கக் காட்டினிலே;
அதுமிகவும் துரோகம்!

(வேறு)

இந்தியக் கண்டத்தில் உள்ளவர் - அவர்
எவ்வின மாந்தர்கள் ஆயினும்
சொந்தத்தில் ஆட்சி நடத்துவர் - அவர்
சொத்துப் பிரிவினை கொண்டுமே!
சிந்தை மகிழ்வுடன் வாழலாம் - அன்றிச்
சேர்ந்தும் பெருமையைத் தேடலாம்
வந்த சுதந்திரம் யாவர்க்கும் - பொது
வாகி வளர்ந்திட வாழ்கவே!

(வேறு)

நல்ல சுதந்திரம் வீழ்ந்திட - இந்த
நாட்டிடை யேபல துரோகிகள் - மிகப்
புல்லடி மைத்தொழில் செய்தவர் - வெள்ளைப்
பூதத்தைக் கும்பிட்டு வாழ்ந்தவர் - தமிழ்
எல்லையில் ஓங்குதல் இல்லையே - என
எட்டு முரசொலி கொட்டிட - தொழில்
வல்லவர் கேட்கும் சுதந்திரம் - இன்று
வாழிய என்றுமே வாழ்த்துவேன்!