|
(வேறு)
ஊர் வாழ நகர் வாழ
ஒரு பெரிய தேசம்
உயிர்வாழ உலகத்தில்
எல்லோரும் வாழ
ஏர்உழுதும் நெல்விளைத்தும்
உணவுதனை ஆக்கி
இன்புறவே அளிக்கின்ற
உழவர்களும் நாட்டில்
வேர் போன்ற தொழிலாள
வீரர்களும் நமது
விழியெதிரே நடமாடுந்
தெய்வங்கள் ஆவார்!
நீர், காற்று, வெளிச்சம் எனும்
சுதந்திரம்அன் னாரை
நிழல் போலும் குடை விரித்துக்
காத்திடுதல் வேண்டும்!
குடியரசை எழுப்பு வதும்
முடியரசை வீழ்த்தி
குளிர் வீசும் அந்திதரும்
‘செவ்வானம் போன்ற
கொடி யேற்றி’ உலகத்தை
ஒருகுடும்ப மாகக்
கூட்டுவதும் மானிடரின்
சுதந்திரமாம் என்பேன்!
கொடி மலரும் முல்லை மணம்
பொதிகைமலைத் தென்றல்
கொள்ளையிடும் உள்ளத்தை -
அவற்றைப் போல்நமது
மடிமீதில் தவழுமொரு
சுதந்திரத்தைப் போற்றி
மனதார நேசித்தேன்
மலருக! நல் வாழ்வே!
|