|
இந்தி எதிர்ப்புப் பரணி
அழைப்பு
புறப்படு புறப்படு பகைமேலே!
புலியென நரியினத் தொகைமேலே!
திறப்படும் நின்கொடி மலைமேலே!
சிரிப்புடன் நடநட அலைபோலே!
தரைப்படை கடற்படை எதுவானால்
தமிழ்ப்படை நடைபெறத் தூள்!தூளே!!
திரைப்படை புனற்படை அதுபோலே
செறிபட நெறிபட விரைவாயே!
எலிஎலி யெனவரும் பகைமீது!
எதிரிடி படும்படி நீமோது!
புலிபுலி யெனத்தமிழ் மகன்சென்றால்
புவிபுவி அதுதரும் புகழ்ஒன்றே!
(வேறு)
படைத்தலைமை
சம்பத் தெனும்ஒரு சிங்கம் அதுபடை
தன்னை நடாத்திடவே!
வம்பப் பகையது வந்தே பொருதிடில்
வாழ்வு நடாத்திடுமோ?
கொம்பும் சங்கும் முழங்கும் எங்கும்
கொள்கை விடாதவர்கள்,
நம்பும் படைநம் படையென் றண்ணன்
நன்கு பராவிடவே!
|