பக்கம் எண் :

124தமிழ்ஒளி கவிதைகள்2

கண்கள் சிவக்கக் கடுஞ்சினம் துள்ள
மண்ணும் அதிர மனையில் ஓடி
ஆத்திரம் இம்மியும் ஆற்றமாட் டாமல்
கோத்திரம் சொல்லிக் குலமும் பேசிக்
கொட்டிய சொற்களும் கோபமும் ஓங்கக்
கட்டிய கையும் கனைப்புமாய் நின்றார்,

ராதையின் தந்தை நடுங்கிய காலில்
பேதையாம் மனைவி பித்தொடு சொல்வாள்:
“பறையன் என்று பழித்திடல் வேண்டா
முறையில் மருமகன் முறையோ?” என்றாள்!
“நீயும் பறைச்சி நிசம்நிச” மென்றார்!
வாயும் பொத்தி வரும்சிரிப் போடு,
இளையோர் பலரும் ஏகினர் அப்பால்!
விளைவோ கொடியது! விசனமும் பெரிதே!

(வேறு)

சேரியில் கனன்று மேயும்
தீ யெனும் அரக்கன் மாயப்
போரிடும் கண்ணன் நாமம்
போற்றினார் எளிய ரெல்லாம்!
நீரினால் அல்ல - நெஞ்சின்
நீர்மையால் நெருப்ப ணைத்துப்
பேரினால் உயர்ச்சி பெற்றான்;
பிறப்பினால் அல்ல! வேனும்,

ஊரினில் ஜாதி யென்ற
ஒன்றினால் இகழ்ச்சி பெற்றான்!

சேரியில் தோல்வி யுற்ற
சினத்தொடும் திரும்பி வந்து,
நேரினில் ராதை நெஞ்சில் 
நெருப்பனல் தகித்த தம்மா!
யாரினி அணைக்க வல்லார்!
அணைத்தவன் அகன்று போனான்!
வேரிலை யென்று வீழ்ந்து
வெதும்பிய கொடியு மானாள்!