|
சொல்லவோ நெஞ்சம் வேகும்,
சுடுகனல் எரிக்கும் அம்மா!
நல்லவர் பிரிய லுற்றார்,
நாடக அரங்கு போலே!
கல்லெனும் நெஞ்சர் ஜாதிக்
கட்டுகள் கட்டி விட்டார்!
புல்லென இளைக்கும் ராதை;
“புலையனாய்ப்’ போனான் கண்ணன்!
ஊரினர் இகழ்ச்சிக் கூற
உறவினர் வெறுப்பும் மீறச்
சேரியை அடைந்து தொண்டு
செய்திடக் கண்ணன் சென்றான்.
“பாரினில் தர்மம் சாகப்
பழமையும் உருண்டு போகக்
காரியம் செய்தான், நீசக்
கண்ணனும்” என்றார் ஊரில்!
தொலைந்தது பீடை யென்றே
துள்ளினார் மாமன் ஆனார்!
அலைகடல் துரும்பு போலும்
அலைவுறும் ராதை யுள்ளம்!
சிலையென நிற்பாள், ஏதும்
செய்திடாள், பேச்சு மற்றாள்!
குலைந்தனள் எண்ணி எண்ணிக்
குமைந்தனள் நோயு முற்றாள்!
காலமும் செல்ல ஓர்நாள்
கண்மணி ராதை தன்னைக்
காலனும் கவர்ந்து சென்றான்
கண்ணனும் கலங்கி நின்றான்!
ஞாலமும் நாடும் வாழ
நண்ணிடும் சேவை செய்வார்
கோலமார் தீப மொத்தார்
கொடுமையால் அணைத லுற்றார்!
|