பக்கம் எண் :

126தமிழ்ஒளி கவிதைகள்2

(வேறு)

பேரூர் தன்னில் பிறந்து வளர்ந்து
கண்ணனும் நானும் கருத்தொரு மித்து
நட்பொடு கல்வியும் நாளும் பயின்று,
வாழ்ந்திடு காலையில் வந்தது துன்பம்!

சென்னையிற் கல்வி சிறப்பொடு கற்க
என்னை அனுப்பினர் எந்தையென் செய்கேன்!

பிரிவெனுந் துன்பம் பிடர்பிடித் துந்த
எரிந்திடு தீயில் இறங்கி நடந்தேன்

வழியோ நெடுந்தொலை; வாழ்க்கையோ சிறிது!
கண்ணன் பிரிந்த கதையோ கொடிது!

சென்னையில் ‘கல்விச் சிறையில்’ இருந்த
கைதியெனக்குக் கனவும் நனவும்
சுதந்திரம் கோரும் சுவடியும் பண்ணும்
காற்றிலே வந்த கவிதையும் கண்ணன்!
பேரூர் இருந்த பெருந்திசை யெங்கும்
கண்ணன் உருவே காணுமென் கண்கள்!
காலம் விரைந்திடக் கண்ணன் நினைவே
வளர்ந்து பெரிதாய் வளர்ந்தது நட்பே!

       ஒருநாள்,
காற்று மெதுவாய்க்
       கதவை யிடிக்க
காரணம் என்னெனக்
       காற்றை வினாவக்
‘கடிதம், கடிதம் 
       கதவைத் திறநீ,
கடிதம் வரைந்தனன்
       கண்ணனும் என்றது!