|
சேரியில் செங்கோடி!
செக்கர் என ஒளி
சிந்திப் பறந்தது
சேரியில் செங்கொடியே - திகை
திக்குகள் அன்று
சிரித்தன, கூடின
சேர்த்தன கைகளையே!
கண்ணன் இயற்றிடும்
காரியம் செப்பிடும்
கத்தைக் கடிதமடா - அவன்
எண்ண முயர்ந்தது
தேச முயர்வுற
எத்தனை தியாகமடா!
சுக்கிரன் சேரி
உழவரெலாம் இனிச்
சோதரர் ஆகிவிட்டார் - கனல்
கக்கிடும் கண்களைக்
காட்டிய மேலவர்
கண்டு நடுங்கிவிட்டார்!
சங்க மெழுந்தது
சாகரம் போலவே
சத்திய போதனையில் - ஜெய
சங்க மெழுந்தது
மேள மொலித்தது
ஜாதி நடுங்கிடவே!
|