|
(வேறு)
தேரூர் வதுபோல் தெருக்கள் அதிரப்
பேரூர் எங்கும் பிறந்தது முழக்கம்!
நிலத்திற் குடையோர் நிலமுழு வோரும்
நீர்இரைப் போரும் பயிர்விளைப் போரும்!
காற்றில் மழையில் கடுகி யுழைத்துச்
சேற்றிலே அமுது செய்விப் பார்க்கே
காணியும் காடும் கழநியும் தேவை!
பேரூர் எங்கும் பிறந்தது முழக்கம்!
ஊரூர் தோறும் உயர்ந்தது சங்கம்!
பேரூர் இருந்த பெருந்தனக் காரர்
சேரிப் பறையர் திமிரை ஒடுக்க
விரைந்தார் எழுந்தார் வெகுண்டார், குதித்தார்!
“கண்ணன் இயற்றிய காரிய மென்றார்!
பாதகன் வெட்டும் படுகுழி” என்றார்!
ராதையின் தந்தை நகைத்து, நடந்தார்;
கண்கள் கனலக் கருத்தொடு சொல்வார்;
“கண்ணன் ஒழிந்தால் கலகம் ஒழியும்!
வழியைத் தேட வருவீர்” என்றார்.
சாதிச் செருக்கர் சறுக்கி நடந்தார்!
சதியோ, சூழ்ச்சியோ சறுக்கும் வழியோ!
எந்நெறிச் செல்ல எழுந்தனர் அன்னார்?
(வேறு)
அங்கு நடந்த தெலாம்
அஞ்சல் அறிவிக்க,
செங்கமலக் கண்ணன்
திருமுகத்தைக் காண்பதற்கு
நெஞ்சம் விழைந்து
நெடுங்கனவில், பேரூரில்
தஞ்சம் புகுந்து
தவித்துக் கிடந்ததினால்,
|