பக்கம் எண் :

130தமிழ்ஒளி கவிதைகள்2

ஆபத்தாய் உள்ளேன்;
       அதனால் வருகென்று
கோபமொடு தந்தி
       ‘கொடுத்திட்டேன்’ கண்ணனுக்கு!
கெஞ்சி யழைத்தாலும்
       கேளாது சங்கமெனும்
வஞ்சிதனைக் காதலித்து
       வாரா திருந்துவிட்ட

‘கண்ணனுக்கு, வேண்டுமிது
       கட்டாயம்’ என்றுநான்
திண்ணமொடு தந்தி
       தெரிவித்தேன் சேரிக்கு!

அன்றிரவு கண்கள்
       அரைநொடியும் தூங்கவில்லை!
நின்றிருக்கும் கண்ணன்
       நிலாமுகம்என் கண்ணெதிரில்!

வந்திடுவான் கண்ணன்
       வருகவென் றழைத்திடுவேன்
‘தந்திஎதற்’ கென்பான்,
       ‘சந்திக்க’ என்றிடுவேன்!
‘சின்னஞ்சிறு பிள்ளை
       செய்கையன்றோ’ என்றிடுவான்;
‘உன்னல் விளைந்தபழி,
       உன்செய்கை!’ யென்றுரைப்பேன்

கண்ணன் கலகலெனக்
       காற்றில் சிரித்திடுவான்
கண்ணன் சிரிக்குமொலி
       காற்றில் மிதந்துவரும்...
காலை இளங்கதிரில்
       கண்ணன் முகந்தெரியும்!
சோலை மலர்களெலாம்
       சூழ்ந்து வரவேற்கும்!