பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 135

(வேறு)

கண்ணீ ரதனில் கரைந்தது நெஞ்சம்!
‘கண்ணா! உனைநான் காணுதல் வேண்டிப்
பொய்யும் புளுகும் புனைந்தனன்’ என்றேன்
சிரித்தனன் கண்ணன்; சிலிர்த்ததென் மேனி!
‘நல்லது நாடினை நண்பநீ’ என்றான்
“கண்ணிலே நின்றாய்! காட்சியில் நின்றாய்
விண்ணிலே நின்றாய்! வீதியிலே நின்றாய்!
பார்த்திட நெஞ்சப் பறவைதான் உன்னைப் 
பறந்திடு காலம் பறந்தது தந்தி!”
தந்தியைப் பெற்றுத் தரையிலே வையேன்
‘நெஞ்சிலே வைத்து நெடுந்தொலை வந்தேன்!
‘வந்தது முன்றன் வரைதுயில் கண்டேன்
ஆபத் தனைத்தும் அறையினுள் உள்ள
மர்மமென் றெண்ணி மனந்தே றிட்டேன்!”
என்றனன் கண்ணன் எழும்சிரிப் போடு!
“சென்னையில் வீட்டின் சிரமம் பெரிது!
‘வீடு’ கிடைப்பினும் *‘வீடு’ கிட்டாது!
ஓட்டுத் திண்ணையில் ஒன்பது வாசல்”
வாசலும் நல்ல வைகுண்ட வாசல்”
என்றதும் அங்கே எழுந்த சிரிப்பில்
‘வீடும் அறையும் விழலா’ மென்று
கண்ணன் உரைத்தான் கலைநயத் தோடு!
‘மாதம் பிறந்தால் மனிதன் தலையில்
வாடகை வீழ்ந்து வருத்திடு’ மென்றேன்!
‘பிழைத்தோம் இன்று, பிழைத்தோம்’ என்று
கண்ணன் அமர்ந்தான் கலகலப் பாக!

*வீடு = மோட்சம்