|
குளித்திடக் கண்ணன் குளிர்நீர் கேட்டான்
குழாயெனும் ஒன்று குடிநீர் தனையும்
விடாது வைத்துள்ள வீர முடைத்து!
ஆகையால் நாங்கள் அதனிடம் தோற்று
ஓட்டலை நோக்கி ஓடத் துணிந்தோம்!
கண்ணனும் நானும் கடைவழிச் சென்றோம்!
(வேறு)
கண்ணனும் நானும் நடந்த மகிழ்ச்சியில்
கற்பனை பொங்கியதாம் - அன்று
விண்ணொடு மண்ணும் நடந்தன எம்மொடு
வீதி உலா வரவே!
(வேறு)
‘வாங்கலையோ ரோஜா
மலர்ச் செடியோ’ என்றகுரல்
ஓங்கி யெழுந்து வரும்
ஒய்யார வீதி யிலே!
கண்ணன் திடுக்கென்று
காலூன்றி நின்றுவிட்டான்
‘விண்ணில் இருந்தொலிக்கும்
வீணையோ’ என்றிட்டான்!
‘வீணையல்ல பெண்ணொருத்தி
விற்றகுரல்’ என்றுரைத்தேன்
காணத் திரும்பி விட்டான்
கண்ணனவன் அந்நேரம்!
கைதட்டி நானந்தக்
காரிகையைக் கூப்பிடவும்
மெய்யொட்டி வந்தாள்
மெலிந்தஇளம் பெண்ணொருத்தி!
|