பக்கம் எண் :

138தமிழ்ஒளி கவிதைகள்2

ரோஜா மலர்ச்செடியும்
       நூதனமாய் வாங்கியதேன்?
ராஜா உரைத்திடுக
       நானறிய என்றேனால்

கண்ணன் குரல்நடுங்கும்
       கண்ணூடு நீர்ததும்பும்
விண்ணில் விழிதிரியும்
       வேதனையாய் மூச்சுவரும்!

‘கண்ணன் கரம்பற்றிக்
       காரணமும் யா’தென்றேன்
‘எண்ணமும் பொய்த்ததடா
       என்செய்கேன்?’ என்றழுதான்!

‘ராதைக்கு ரோஜா
       நறுமலரில் ஆசையடா
பேதைக்கு வாழ்வில்
       பிரியமடா’ என்றழுதான்!

‘சென்றாள் எனைத்துறந்து
       தேசத்துப் பூமகளும்’
என்றான் அவன்சோகம்
       எல்லையற்ற ஆழ்கடலாம்!

காலம் அழுததுபோல்
       கண்ணன் அழுதானோ
கோலம் அழுததுவோ
       கொம்புமலர் விம்மிற்றோ!

“விண்ணில் விரிந்தமலர்
       மண்ணிடையே வீழாதோ!
துக்கமெனும் முள்ளிடையே
       தோன்றியது வாழ்க்கைமலர்!