பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 139

பொக்குமுள் தன்னோடு
       போராடும் வாழ்க்கையிது!
நீயறியா நீதி
       நிகழ்த்தவில்லை நான்” என்றேன்
தாயருகே நிற்கும்
       தகைமையொடு கண்ணனவன்,
‘பாழும் சமூகப்
       பகைவர் ஒழியுங்கால் 
வீழும் அநீதியெலாம்
       விண்ணில் ஒளிமலரும்!’
என்றே எதிர்காற்றை
       எற்றி நடக்கின்றான்
குன்றே எனுந்தோளான்
       கொள்கைக்கே வாழ்வுடையான்!

குளித்தோம்; புசித்தோம், குதூகலத் தோடு!
வீடு திரும்பி, விதவிதமாகக்
கற்பனை பேசிக் கதைகள் புனைந்தோம்!
ரோஜாச் செடியை நூதனப் பொருளை
அன்பளிப்பாக அளித்தனன் கண்ணன்!

(வேறு)

சென்றனன் கண்ணன் ஊர்க்கே
திரும்பவும் காணும் நாட்கள்
என்றென ஏங்கி நின்றேன்
ஏங்கிய நெஞ்சத் தோடும்!

(வேறு)

சிற்சில நாட்களும் சென்றபின் சுக்கிரன்
சேரி மறுமுறையும்
பற்றி யெரிந்தது பார்! எனும் சென்னையின்
பத்திரிகைச் செய்தி!