பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 141

(வேறு)

கையொடு கையுறப் பற்றி நெறித்தேன்,
காலொடு காலுற மண்ணை மிதித்தேன்
பொய்யொடு பொய்யுற வஞ்சர் அழிந்து
பூமி சிரிக்கும் புரட்சி வெடிக்க!

(வேறு)

பேரூர் இருந்த பெரியவ ரான
ராதையின் தந்தை நன்கு முயன்று
கண்டு பிடித்தார் கண்ணன் செயலை
என்றிடு செய்தி எங்கும் உலாவக்
கேட்டு வெகுண்டேன்; கெடுமதி யாளர்,
வஞ்சகர் வகுத்த வழியும் அறிந்தேன்!

மணமகன் ஆகி மணையில் அமர்ந்த
கணத்தில் சேரிக் கனலை அவிக்க
வாழ்வும் சுகமும் வளமு மிழந்து
தாழ்வும் துயரும் தலையில் சுமந்தோன்,

கண்ணனோ சேரியின் கண்ணைச் சுடுவான்?
கண்ணனோ கையால் கனலை மூட்டுவான்?
என்னெனக் கூறி எதையும் புளுக
முன்வரு கின்றாய் மூடமே உலகில்?

பொய்யால் உலகப் புரட்சிநின் றிடுமோ?
கையின் குடையால் கதிர்மறைந் திடுமோ?
வெள்ளியைக் கார்இருள் வீழ்த்துதல் உண்டோ?
எள்ளி நகைக்கும் இராக்கதர் மடிவர்!

கண்ணன் உயிரைக் கவர்ந்திடு மூடர்
மண்ணொடு மண்ணாய் மடிவது திண்ணம்!
மக்களின் கையால் மறைவது திண்ணம்!
இக்கணம் கண்ணன் இறந்திடு கின்றான்