பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 47

எனினும், 

தோல்வியெனும் பள்ளத்தைத் தோண்டி வைத்தார், வஞ்சகர்க்கு 
வால்பிடித்துப் போட்டி வளர்க்கின்ற பாதகர்கள்!

அதனால் 

எண்ணற்ற துன்பங்கள் இன்னும் தொடர்ந்தனவே! 
கண்ணீர் உலரவில்லை! காயங்கள் ஆறவில்லை! 
ரத்தம் சொரிந்த உடல் இன்னும்நல மாகவில்லை! 
முத்தம் பொழிந்து, முதுமையென்றால் வேண்டாத 
கசப்பாய் வெறுக்கவைத்த காதல் மனைவி 
தசைகிழித்த குண்டு தாக்குதலால் மண்சுவர்கள் 
வாய்பிளந்து நின்ற வடுவின்னும் மாறவில்லை! 
வாய்விட்டுச் சொல்லாத சோகவடிவம் இவை!

இத்தனையும், 

கண்டு மலைத்தோமா? கையலுத்துப் போனோமா? 
பண்டுதொட்டுப் பாட்டாளி வர்க்கப் படையெதுவும் 
தோல்விப் படுகுழியில் தூர்ந்தொழிந்து போனதுண்டோ? 
கால் தடுக்கி நின்றதுண்டோ? காரியத்தில் தாழ்ந்ததுண்டோ? 
குகைக்குள் அகப்பட்ட கோவை முதலாளி 
தொகையாக எம்மைத் தொலைக்க ‘ஆள்குறைப்பு’ 
‘வேலைப்பளு’ வென்று வேட்டுக் கிளப்புகிறான்! 
ஆலைக் கரும்பெனஎம் அங்கம் பிழிகின்றான்!

அவன் தலைக்கு மேல், 

வெடித்துவிட்ட பாறை விழுந்தருணம்! மற்றோர் 
அடியெடுத்து வைக்குமுனம் ஆள்நிலைமை என்னாமோ? 
புதுவை முதலாளி போக்கிவிட்ட தூதர் 
எதுகண்டு போய்ச் சொல்ல இங்கு வருகின்றார்! 
சாவோலை கொண்டு செல்ல தந்தி, தபால் உண்டு! 
பாவோலை தீட்டுதற்குப் பத்திரிகை பக்கமுண்டு! 
பின்னர் எதற்கந்தப் பேதையர்கள் இங்குற்றார்? 
தின்னும் புலையெச்சில் சோற்றுக் கடன்தீர்க்கும் 
நன்றியெண்ணி வந்தனரோ நாய்போன்ற தன்மையினால்?