|
கடும்வெய்யில், வசந்தமெனக்
குளிர்ச்சி வீசும்;
கவினார்ந்த கலைகளெலாம்
வீடு வீடாய்க்
குடும்பங்கள் நடத்துகின்ற
காட்சி கண்டேன்
குருவியைப் போல் ஊரூராய்ப்
பறந்து சென்றேன்!
வயற்புறத்தே செல்லுங்கால்
உழவன் என்போன்
வாகான தோளுடையான்
நிமிர்ந்து நின்று
நயமான கவிபொழிந்தான்;
பழைய நாளில்
நடந்திட்ட கொடுமைகளைப்
பாட்டாய்ச் சொன்னான்
ஆளுக்குப் பாதியெனத்
தானியத்தை
அள்ளிப்போய் நிலப்பிரபு
வைத்துக் கொண்டு
வாளுக்குப் பலியிட்டான்
என்றன் வாழ்வை!
வறுமையதன் நிழல்கூட
இப்போதில்லை!
நிலமெலாம் என்னுடைமை;
இல்லை, யில்லை!
நேயமிகும் என்நாட்டார்
உடைமை; மக்கள்
குலமெல்லாம் வாழ்ந்திடவே
நான் வாழ்கின்றேன்
குருவியே உன்னைப்போல்
என்று சொன்னான்!
|