பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 51

அவன்பட்ட கொடுமையெலாம் 
       மடிந்து மக்கி
அங்குள்ள வயற்பக்கம் 
       செத்து வீழ்ந்து
சவமாகிக் கிடந்ததனைக் 
       கண்டேன்; வெற்றி
சரசநடை நடந்திட்டான் 
       உழவன் அங்கே!

வழிகேட்டேன் நகருக்குச் 
       செல்வதற்கு
வான்சுடர்போல் கண்காட்டி 
       மகிழ்ச்சி யேந்தித்,
“தொழிலாளர் எம்தலைவர் 
       அங்கே யுள்ளார்;
தோன்றுதுபார் ஆலை, 
       அதோ!” என்று சொன்னான்!

காற்றினிலே பறந்திட்டேன், 
       அடடா அந்தக்
காற்றுக்கும் அடங்காத 
       மகிழ்ச்சி வெள்ளம்!
சோற்றுக்கு வாடாத 
       மனிதர் வாழும்
சுதந்திரநன் னாடுலவும் 
       காற்றே யன்றோ?

நகர்புகுந்தேன்: ஆலைக்குள் 
       சென்று பார்த்தேன்
நாட்டுக்கும், நானிலத்தில் 
       யாவருக்கும்
சகதோழர், தலைவர், புது 
       மனிதர் ஆகித் 
தருமத்தைத தொழிலாளர் 
       உடையாய் நெய்தார்!