பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 59

மேதினமே வருக

கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமை போலுழைத்துப்
பாடுபட்ட ஏழைமுகம் பார்த்துப் பதைபதைத்துக்
கண்ணீர் துடைக்கவந்த காலமே நீ வருக!

மண்ணை, இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர் பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி
கையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட
பொய்யர் குலம் நடுங்கப் பொங்கி வந்த மேதினமே!

மன்னர் முடிதரித்த நாட்கள் மடிந்தன காண்!
மின்னாய் எரியுற்ற மீனாய் விழுந்தனகாண்!
நாதம் கிளர்ந்துலகை நாள் முழுதும் ஆட்டிவைத்த
வேதம் பெயர் மழுங்கி வெற்றுடலாய் ஆனதுகாண்! 
ஆனால்
ஏழைத் தொழிலாளர் ஏற்றி வைத்த தீபத்தில்
நின்னுடைய நாமம் நிலைத்ததுகாண் இவ்வுலகில்!
அமுதனையாய் அன்னாய் அருகுற்றாய் இந்நாள்
சமுதாயப் பந்தரிலே சந்திப்போம் வாராய் நீ !

மண்குளிரும், மக்கள் மனங்குளிரும், அன்னவர்
தம்கண் குளிரும், ஆனந்த வெள்ளம் கரைபுரளும்!
காவியத்தில் பார்த்ததில்லை, கண்டறியா ஓர் புதுமை!
சோவியத்தில் இன்று சுடர்மணிப்பொன் மாளிகையில்
ஏற்றி வைத்தார் உன்னை இசைந்த மலர் மாலைகளால்
சாற்றி வைத்தார் இன்பம் சமைத்து வைத்தார் எவ்விடத்தும்
காரிருளை வென்று கலிதீர்க்க மேலெழுந்த
சூரியன்போல் மாமதிபோல் வையகத்தைச் சுற்றிவரும்
மேதினமே நீ வருவாய் மின்னல் ரதமேறி
ஊதினோம் எக்காலம் உன்னை வரவேற்க!
வெள்ளமே நீவருக! மேற்குப் பனித்திரையில்
கொள்ளை கொலை நடத்தக் கூட்டணிகள் கூட்டுபவர்
மூடு திரை கிழித்து முன்னேறி வந்திடுக!
தேடும் வழித்துணையே தீபமே நீ வருக!