பக்கம் எண் :

60தமிழ்ஒளி கவிதைகள்2

‘காடு நகராச்சு; காலம் பவுனாச்சு;
வீடு கலையகமாய் விண்ணகமாய் மின்னிற்று!’ 
தொழிலாளர் சாதனையைத் தூக்கிக் கொடி 
பிடித்துவாராய் மணிவிளக்கே வந்திடுவாய் மேதினமே!

யுத்த ஒலி கேட்கிறது, ஊர்மிரட்ட எண்ணுபவர்
பித்தம் அணுகுண்டாய்ப் பேயாய் அலைகிறது;
ரத்த வெறிபிடித்த லாப அரக்கர்களின்
கத்தி, மனிதர் கழுத்தறுக்க நீள்கிறது!
இந்த இருட்டுலகை எற்றிக் கவிழ்த்திட நீ 
வந்தாய் வருகின்றாய் வாழ்க்கையெனுந் தேரேறி!
நீல நெடுந்திரையாய் நீள்கின்ற கைகளினால் 
ஞாலத் தொழிலாளர் நல்லரசைத் தோற்றுவிப்போம்
என்ற சபதமொடும் எண்ணரிய வேகமொடும் 
குன்றா உறுதியொடும் கொள்கையோடும் நீ வருக!

புனிதமே! புத்துணர்வே! அன்பே! புதுமையே!
மனிதரெலாம் நின்நாமம் வாழ்த்தி வரவேற்க 
ட்ரூமன், ஷு மன், மார்ஷல், சர்ச்சில் எனும் சண்டாளர்
வெந்து மனம் புழுங்கி வேதனையில் மூழ்கிட்டார்
வந்தாய் அவர் நெஞ்சை வாள்கொண் டறுத்தெறிய!
முன்னை இருள் கிழித்து முத்தமிட்டாய் இத்தரையை!
அன்னை உலகிற்கோர் ஆதரவு நீ தந்தாய்!
தூங்கும் குழந்தைக்குத் தொட்டிலென வந்தாய் நீ!
ஏங்கும் அகதிக்கோர் இன்பமென நின்றாய் நீ!

உன்னை வரவேற்க ஒவ்வொருவர் இல்லத்தும்
மின்னைப் பரப்பியவோர் மேடைபோல் எத்திசையும் 
காற்றில் அணையாமல் காலத்தால் மாளாமல் 
ஏற்றி வைத்த நாள் விளக்கின் தீபம் எழில்பரப்ப
வருக நன்னாளென்று வாழ்த்தொலிகள் பொங்கத்
தெருவில் தொழிலாளர் சிம்மக் குரல் எடுத்து
நின்னாமம் உச்சரிக்க நின்றார் அணியணியாய்
பொன்னாமம் வையம் புகழ் நாமம் நின்னாமம்!

ஆலையின் பக்கம் அணி பெற்ற மைதானம்;
சோலைப் பறவைகளாய்ச் சூழ்ந்த தொழிலாளர்
ஊர்வலமோ வெள்ளம்! ஒரு கடலின் நெடுங்கைகள்!
தேர் ஏறி வந்து திசையெங்கும் பாராய் நீ!