பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 61

மாணவர்தம் சங்கத்து மாடிமிசை நின்வருகை 
ஏற்க விரிகின்ற கைகள் கடலலையோ!
நீடு குயில் மொழிசேர் மாணவிகள் நெஞ்சுருகப்
பாடுகிறார், நானும் பறவையைப்போல் ஆகிவிட்டேன்!
ஆலைத் தொழிலாளி அன்புமகன் ஓடிவந்து
சோலைப் பறவையெலாம் சொன்னதுபோல் சொல்லி
வயிற்றுப் பசி மறந்து வாழ்த்துகிறான் உன்பெயரை;
பயில்கின்ற இவ்வுலகப் பாட்டும் நீ! பண்பும் நீ!

தாழ்வைத் தகர்க்கத் தலைநிமிர்ந்த மேதினியில்
வாழ்வின் சமாதானம் வாய்ந்த நெடுந்திரையில்
ஜீவியமாய் நின்றதொரு சித்திரம்நீ; வானமரர்
காவியம் நீ; கற்பனைநீ; காணுமொரு காட்சியும் நீ!
தீரா இருளொழிந்து திக்கு விளங்க இதோ
வாராய் வளர்பொருளே மேதினமே வாராய் நீ!

வெட்டுகின்ற மின்னொளிபோல் வீறிட்ட காற்றது போல்
சட்டச் சுவர்மீது தாவிப் போய் விண்முகட்டின் 
மேலே உனது கொடி வீசிப் பறந்து, புயல்
போலே எமக்குப் புதுச்செய்தி சாற்றியது!
நாசக் கிருமிகளாய் ஞாலப் பெருநோயாய்
வாசம் புரிகின்ற ‘வால் தெரு’வின் மூடருக்குக்
‘காலத் திறுதியாக காண்’ என்று செங்கொடியை 
ஞாலத் தெருமுனையில் நாட்டுகின்றாய் வானுயர!

ஒல்லொலியாய்ப் பொங்கிடநின் காலடியின் ஓசையொடு
செல்கிறது செஞ்சேனை நாலுதிசை முழுதும்!
நீக்ரோவர் தம்முடைய நீள்கரத்தால் நல்லுளத்தால்
சீன இனைஞர்களுக்குத் தின்பண்டம் போலினிய
வாழ்த்தை அனுப்புகிறார் உன்னுடைய வண்டியிலே!
வாழ்த்தொலியால் மண்ணின் வசையின்று நீங்காதோ!
வானத் தரசியென வாகாய் வளர்கின்ற 
சீனப் பெண் தந்த திருவாழ்த்தை ஏந்தி - வந்து
என்னெதிரே நீட்டி எகத்தாளம் போடுகிறாய்
பொன்னே! புதுமலரே! புத்தொளியே! வாழியநீ!