பக்கம் எண் :

62தமிழ்ஒளி கவிதைகள்2

சோலைக்குயில் வந்து சொல்லிற்று நின்பெருமை!
ஆலைச்சங்கு நின்பெயரை ஆகாய வீதியிலே
முழக்கிக் கிடுகிடுக்க மூச்சுவிட்டு நிற்கிறது!
உழைக்கின்ற தோழர் உணர்ச்சியே நீ வருக!

கூட்டங்கள் கூட்டிடுவார் கும்பல் பெருக்கிடுவார்
‘ஆ’ என்பார் ‘ஊ’ என்பார் ஆயிடினும் சிப்பாய்கள்
கூடித் தடியெடுத்தால் கும்பிட்டுப் போய் விடுவார்!
உன்னுடைய கூட்டமிந்த ஓட்டைக் கழிசடைகள்
நாணித் தலைகுனிய ராணுவமாய் முன்னேறி
ஆயுதங்கள் தம்விழியும் அஞ்ச நகைக்குமொலி 
ஞாலம் வெடித்துவிட்ட நாதமெனப் பாய்கிறது!
காலன் நடுங்கக் காலமே நீ வருக!

துறந்தார் சுகமுழுதும்; தோள் கொடுத்தார் நின்பணியில்;
இறந்திட்ட எம் தோழர் இன்றைக் குயிர் பெறுவார்!
சுடுகாடும் நின்வரவால் சொர்க்கமாய் மாறாதோ!
தொடுகின்றாய் நின்கையால் தொட்டதெலாம் பூக்காதோ
பொந்தில் உயிர்வாழ்ந்தார்; போக்கற்றார்; இன்பமிலார்;
கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்
ஏற்றி வைத்த நின்பெருமை என்னுயிர்க்கும் மேலன்றோ!
போற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக!

பொன்னார் நிறமுடையாள் பூவின்மணமுடையாள்
என்னருமைக் காதல் எழிலரசி நின்பெயரை
உச்சரிப்பாள்; அன்பால் உபசரிப்பாள் ஆகையினால்
எச்சரிக்கை இல்லில் இருந்து விருந்தருந்து!
காதலர் தம் இல்லில் கணநேரம் தங்கிவிடில்
போதம் பெறுவரவர் போர் வீரர் ஆயிடுவர்!

அமெரிக்க மாநகரில் அன்றொருநாள் மக்கள்
குமுறியெழுந்து குருதியெலாம் சிந்தியதால்
வான் சிவந்து மண்சிவந்து மாகடலும் தான் சிவந்து
ஊன் சிவந்து வந்தாய் உயிர் சிவந்த செந்தினமே!
உன் கொடியைப் போற்ற உயிர் விட்டார் அந்நாளில், 
வன் கொடியர்மாய வழிகண்டா ராதலினால்
வாழ்கின்றார் இன்றும்; வளர்கின்றார் நாள் முழுதும்;
சூழ்கின்றார் வானில்; சுடர்கின்றார் நீ வருக!