பக்கம் எண் :

106மலரும் உள்ளம்

சேற்றில் தாமரை

மனிதர் வெறுக்கும் சேற்றிலே
    மலர்ந்து நிற்கும் தாமரை.
புனித மான கடவுளைப்
    பூசை செய்ய உதவுதே!

அழுக்க டைந்த சிப்பியில்
    அழகு முத்தைக் காணலாம்.
கழுத்தில் நல்ல மாலையாய்க்
    கட்டி மகிழ உதவுதே!

கன்னங் கரிய குயிலிடம் 
    காது குளிரும் கீதமாம்.
"இன்பம், இன்பம்" என்றுநாம்
    இன்னும் கேட்கச் செய்யுதே!

விடத்தில் மிக்க பாம்பிடம்
    விலையு யர்ந்த ரத்தினம்.
அடடா, அந்த ரத்தினம்
    அரச ருக்கும் கிட்டுமோ!