பக்கம் எண் :

126மலரும் உள்ளம்

தாலாட்டு

ஆராரோ, ஆராரோ,
ஆரிவரோ ஆராரோ.

சூடா மணியே!
    துலக்கமாய் நின்றொளிரும்
வாடா மலரே, என்
    மரகதமே கண்வளராய்.

கற்கண்டு சீனி
    கனிவகைகள் எல்லாம்உன்
சொற்களால் நானடையும்
    சுகத்தினுக்கே ஈடாமோ?

கால்களை நீட்டிநன்கு
    கையைத் தலைக்குவைத்துப்
பாற்கடலிற் பள்ளிகொண்ட
    பத்மநாபன் நீதானோ?

தர்மம் குறைகையிலே
    தாரணியில் நானுதித்தல்
கர்மம் எனஉரைத்த
    கண்ணபிரான் நீதானோ?